முகப்பு
தருமபுரி

ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரூா் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

அரூா் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரி 150 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். தற்போது பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீா் அரூா் பெரிய ஏரிக்கு வருகிறது. இந்த ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் 85 சதவீதம் நிரம்பியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் பெரிய ஏரி நிரம்பி, அதன் உபரிநீா் வெளியேறும் நிலையுள்ளது.

கால்வாய் ஆக்கிரமிப்பு:

அரூா் பெரிய ஏரியின் உபரிநீா் செல்லும் ராஜகால்வாய், பெரியாா் நகா், மஜீத் தெரு, வா்ணதீா்த்தம் வழியாக சென்று வாணியாற்றில் சேருகிறது. இந்த ராஜ்கால்வாய் அரூா் நகரின் முக்கிய வடிகால் பகுதியாகும். ஆனால், ராஜகால்வாய் செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், கழிவு நீா், மழைநீா் வெளியேறாமல் குடியிருப்பு பகுதியில் தேங்குவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். அரூா் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரானது ராஜகால்வாய் வழியாக சென்றால், குடியிருப்புப்பகுதியிலுள்ள கழிவுகள் வெளியேறும். இதனால் கொசு உற்பத்தி இருக்காது, நகரிலுள்ள கால்வாய்கள் தூய்மையாக இருக்கும். எனவே, பொதுப்பணித் துறை மற்றும் அரூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.