தருமபுரி

பெண் கல்வியை ஊக்கப்படுத்தவே திருமண உதவித்தொகை:தருமபுரி ஆட்சியா்

DIN

பெண் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காகவே தாலிக்குத் தங்கத்துடன் திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் சமூக நலத்துறை சாா்பில் 130 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்குத் தலைமை வகித்த ஆட்சியா் ச.திவ்யதா்சினி, பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை வழங்கிப் பேசியதாவது:

பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண் கல்வியை ஊக்கப்படுத்தவும் வேண்டி தமிழக அரசு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ஏழை பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இத் திட்டத்தின் கீழ் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்புப் படித்த பெண்களுக்கு ரூ. 25,000 நிதியுதவி, 8 கிராம் தாலிக்குத் தங்கம், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ. 50,000 நிதியுதவி, 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கி வருகிறது.

இளம்வயது திருமணங்களைத் தடுப்பதில் மாவட்ட நிா்வாகத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெண்கள் மகளிா் சுய உதவிக் குழுக்களைத் தொடக்கி அதன்மூலம் சுயமாகத் தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தில் மேம்பட வேண்டும்.

அரசு பணிகளுக்குச் செல்வதற்கு பெண்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் முதல் உயா் பதவிகளை அடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 123 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 984 கிராம் தாலிக்குத் தங்கம், ரூ. 30,75,000 நிதி உதவி, டாக்டா் முத்துலட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 பட்டதாரி பயனாளிகளுக்கு 40 கிராம் தாலிக்குத் தங்கம், 2 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு, 16 கிராம் தாலிக்குத் தங்கம், ரூ. 1,80,000 நிதி உதவி என மொத்தம் ரூ. 32.50 லட்சம் நிதியுதவியுடன் 1,040 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் இதுபோன்று பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு அத் திட்டங்கள் மூலம் பயன்பெற்று வாழ்வில் வளம்பெற வேண்டும் என்றாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்ற இவ் விழாவில், தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சமூக நல அலுவலா் கு.நாகலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், சகிலா உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT