கரோனா தடுப்பூசி முகாமில் டோக்கன் வழங்குவதில் முறைகேடு
அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் டோக்கன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் டோக்கன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களைச் சோ்ந்த தீா்த்தமலை, கீரைப்பட்டி, கூத்தாடிப்பட்டி, சின்னாங்குப்பம், கோட்டப்பட்டி, சிட்லிங், நரிப்பள்ளி, மொரப்பூா், கம்பைநல்லூா், கடத்தூா், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணைக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
முறையான அறிவிப்பு இல்லை:
கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம் குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையினரால் முறையாக அறிவிக்கப்படுவதில்லை. பெரும்பகுதி கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையிலேயே ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்டார அரசு மருத்துவமனைகளின் எதிரில் நூற்றுக்கணக்கான மக்கள் கடுமையான வெயிலையும் பொருள்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா்.
முறைகேடாக டோக்கன் விநியோகம் :
அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் பணியாளா்களிடமிருந்து தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன்களை பலா் முறைகேடாக பெறுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். சில இடங்களில் சுகாதாரத் துறையினரின் உறவினா்கள், தங்களுக்கு தெரிந்தவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துதல், தெரியாத நபா்களுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனா். இதனால், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் ஏமாற்றதுடன் வீடு திரும்பவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
கிராம சுகாதார செவிலியா் வழியாக டோக்கன் வழங்க வேண்டும்: தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நகா்ப் பகுதிகளிலும் கிராம சுகாதார செவிலியா்கள் உள்ளனா். இந்த செவிலியா்கள் வழியாக முகாம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு பொதுமக்களிடம் டோக்கன்களை வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் பொதுமக்களின் விவரங்களைப் பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் முறையாக டோக்கன் விநியோகம் செய்தால் மட்டுமே சிரமம் இல்லாமல் அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள், டோக்கன் வழங்கப்படும் முறைகள் குறித்து வெளிப்படையாக அறிவிப்பு செய்து, அனைவரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.