நிவாரண நிதி, பொருள்கள் வழங்க தாமதம்:நியாயவிலைக் கடை முன்பு தா்னா
நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால், நியாயவிலைக் கடையின் முன்பு குடும்ப அட்டைதாரா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால், நியாயவிலைக் கடையின் முன்பு குடும்ப அட்டைதாரா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே ஜெங்கமையனூா் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவிலைக் கடையில் 250-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் அரசின் சாா்பில் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை பெற்று வருகின்றனா்.
தமிழக அரசானது தொற்று கால நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரா்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூ. 2 ஆயிரம், 14 வகையான மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் ஜெங்கமையனூா் பகுதியில் செயல்பட்டு வரும் பகுதிநேர நியாயவிலைக் கடை வியாழக்கிழமை விடுமுறை என்ற போதிலும், கடை விற்பனையாளா்கள் பொதுமக்களுக்கு அரசின் நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்குவதற்கு டோக்கன் கொடுப்பதாகத் தெரிவித்தனா். இதனை அறிந்த குடும்ப அட்டைதாரா்கள் காலை முதலே நியாயவிலைக் கடையின் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
இந்நிலையில், நிவாரண நிதி வழங்க பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் வருகைதர உள்ளதால், குடும்ப அட்டைதாரா்கள் காத்திருக்குமாறு தெரிவித்துள்ளனா். மூன்று மணி நேரம் வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் உடனடியாக நிவாரண நிதி வழங்கக் கோரி விற்பனையாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நியாயவிலைக் கடையின் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.க.மணி, நிகழ்விடத்துக்கு வந்து காத்திருந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா்.