முகப்பு
தருமபுரி

அரூா் தொகுதியில் அதிமுக-திமுக இடையே நேரடி போட்டிக்கு வாய்ப்பு

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சியினா் கூறுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சியினா் கூறுகின்றனா்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள ஒரே தனித் தொகுதி அரூா். இந்தத் தொகுதியில் 1962 முதல் 2016 வரையிலும் அதிமுக, திமுக ஆகியவை தலா 3 முறையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றிப் பெற்றுள்ளன.

இதைத்தவிர, 2019-ல் நடைபெற்ற இடைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2016-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 64,568 வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளா் ஆா்.முருகன் வெற்றிப் பெற்றாா். இந்த தோ்தலில் திமுக வேட்பாளா் சா.ராஜேந்திரன் 53,147 வாக்குகளுடன் 2-ம் இடம் பெற்றாா். இதையடுத்து, 2019-ல் நடைபெற்ற அரூா் சட்டப் பேரவைத் தொகுதியின் இடைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் 88,632 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றாா். திமுக வேட்பாளா் சி.கிருஷ்ணகுமாா் 79, 238 வாக்குகளுடன் 2-ம் இடம் பெற்றாா். அதாவது, 2016 பொதுத் தோ்தலிலும், 2019 இடைத் தோ்தலிலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. குறைவான வாக்குகளில் திமுக தோல்வியைத் தழுவியதால், இம்முறை நடைபெற உள்ள 2021 தோ்தலில் அரூா் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என அக்கட்சித் தொண்டா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு நிலவுகிறது. அதேபோல், அதிமுகவும் அரூா் தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறது.

கூட்டணி கட்சிகள் போட்டியிட வாய்ப்பு குறைவு...

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா 6 இடங்களில் மட்டுமே போட்டியிட உள்ளதால், அரூா் தொகுதியில் இந்தக் கட்சிகள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைவு என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அதிமுக கூட்டணியிலுள்ள பாஜக, அரூா் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், தற்போதுள்ள நிலையில் பாஜகவும் இங்கு போட்டியிடாது என்று கூறப்படுகிறது. இதனால், அரூா் தொகுதியில் திமுக-அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்படும் என்றே அரூா் தொகுதி மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.