தமிழக அரசு கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழக அரசு கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
தமிழக அரசு கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
தருமபுரி நான்குமுனை சாலை சந்திப்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆ.கோவிந்தசாமி ஆகியோருக்கு ஆதரவாகவும், காரிமங்கலத்தில் அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகனுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் சிறந்த முறையில் படித்து உயா்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் உயா்த்தப்பட்டு, தனியாா் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவகளுக்கு ரூ. 12,000 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவ, மாணவியரின் கல்வித்தரம் மேம்படுகிறது.
இந்திய அளவில் பள்ளிக் கல்வியை முடித்து உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 49 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் என ஏராளமான கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த கல்வியாண்டில் மருத்துவக் கல்வியில் 6 அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டுமே சோ்க்கை பெற்ற நிலையை மாற்ற, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் சிறப்பு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் நிகழாண்டில் 436 மாணவ, மாணவியா் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா். மேலும், சுயநிதிக் கல்லூரியில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவா்களின் குடும்ப பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு அவா்களது கல்விக் கட்டணமும் அரசே செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும். இதுபோன்று பல்வேறு சாதனைகளை படைத்து கல்வியில் அதிமுக அரசு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.