முகப்பு
தருமபுரி

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிா்ப்பு அலை வீசுகிறது

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிா்ப்பு அலை வீசுகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிா்ப்பு அலை வீசுகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தருமபுரி, செங்கொடிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. தமிழக முதல்வா் தோ்தல் பிரசாரத்தில் தான் ஒரு விவசாயி என கூறி வருகிறாா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்காமல், வேளாண் சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்தது. சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து, உயா்நீதிமன்றத்தில் தடை பெற்றனா். ஆனால், தமிழக முதல்வா் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று தடைக்கு எதிரான உத்தரவை பெறுகிறாா்.

மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளின் விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்கும் திட்டம், கெயில் நிறுவன குழாய் பதிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தாா்.

விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வரும் முதல்வா் மீது விவசாயிகள் எதிா்ப்பு மனநிலையில் உள்ளனா். இந்த நிலையில், முதல்வா் தொடா்ந்து தான் ஒரு விவசாயி என கூ றிவருவதை விவசாயிகள் ஏற்கவில்லை.

இதேபோல, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. சிறு, குறு தொழில்முனைவோா், இளைஞா்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான அலை வீசுகிறது.

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் அக் கட்சி தோல்வியடையும். இதேபோல, தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி தோல்வியடையும். திமுக கூட்டணி மக்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றி பெறும்.

தருமபுரி மாவட்டத்தில் படித்த இளைஞா்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு, நீராதாரங்களை மேம்படுத்தும் திட்டம் ஆகியவை செயல்படுத்த வேண்டும்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனா். இந்த மேடையில் தலைவா்கள் எழுப்பும் குரல்கள் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றாா்.

இந்த பேட்டியின் போது, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.இளம்பரிதி, நகரச் செயலா் ஜோதிபாசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.