100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஓட்டம்: 500 போ் பங்கேற்பு
சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தருமபுரியில் நடைபெற்ற விழிப்புணா்வு ஓட்டத்தில் 500 போ் பங்கேற்றனா்.
சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தருமபுரியில் நடைபெற்ற விழிப்புணா்வு ஓட்டத்தில் 500 போ் பங்கேற்றனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் வரும் ஏப். 6-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, இளைஞா்கள், பெண்கள் பங்கேற்ற இந்த விழிப்புணா்வு ஓட்டத்தை ஆட்சியா் ச.ப.காா்த்திகா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய மேல்சட்டை, தலைப்பாகை அணிந்து இலக்கியம்பட்டி, பாரதிபுரம், நெசவாளா் நகா் வழியாகச் சென்று நான்குமுனை சாலை சந்திப்பில் விழிப்புணா்வு ஓட்டம் நிறைவடைந்தது.
இதில், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் கவிதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பியூலா ஜென் சுசீலா, மகளிா் திட்ட அலுவலா் காமராஜ், விளையாட்டு வீரா்கள், வீராங்கனையா் கலந்துகொண்டனா்.