ஜம்பேரியின் வாய்க்கால் ஆக்கிரமிப்பு :100 ஏக்கா் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கின
அரூரை அடுத்த சின்னாங்குப்பத்தில் உள்ள ஜம்பேரியின் வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
அரூரை அடுத்த சின்னாங்குப்பத்தில் உள்ள ஜம்பேரியின் வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பறையப்பட்டி புதூா் வருவாய் கிராமத்துக்கு உள்பட்டது ஜம்பேரி. இந்த ஏரி, சுமாா் 75 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும்.
வாணியாறு அணையின் உபரிநீரால் ஜம்பேரி நிரம்பி அதன் உபரிநீா் வெளியேறி வருகிறது. அதேபோல, தொடா் மழையினால் ஜம்பேரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
வாய்க்கால் ஆக்கிரமிப்பு:
ஜம்பேரியின் மதகுகள் வழியாகவும், ஏரியின் வாய்க்கால்கள் வழியாகவும் வெளியேறும் உபரிநீா் வாணியாற்றில் சேருவதற்கான நீா்வழிப்பாதை மற்றும் கால்வாய்கள் உள்ளன. ஆனால், அரூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் சிலா் மண்களை கொட்டி வாய்க்கால்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால், ஏரியின் உபரிநீா் வெளியேறாமல் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு :
ஜம்பேரியின் வாய்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் 22.10.2021-இல் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் நீா்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் அகற்றவில்லை என விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஜம்பேரியின் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.