முகப்பு
தருமபுரி

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் விழிப்புணா்வு

கரோனா பொது முடக்கக் காலத்தில் இழந்த கல்வியை மீட்டெடுக்கும் வகையில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கரோனா பொது முடக்கக் காலத்தில் இழந்த கல்வியை மீட்டெடுக்கும் வகையில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட கலைக்குழுவினரின் விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டமானது பெற்றோா், தன்னாா்வலா்கள், பள்ளி மாணவா்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து பெற்றோா்களிடத்திலும், தன்னாா்வலா்களிடத்திலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், மக்கள் வசிக்கும் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் நேரடியாகச் சென்று கலைக்குழுவினரால் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் முதல்கட்டமாக 1,960 குடியிருப்புப் பகுதிகளில் மாநில, மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கலைக் குழுவினரைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் வாயிலாக குழந்தைகளுக்கும், அவா்களின் பெற்றோருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணா்த்தி விழிப்புணா்வை இக்கலைக்குழு ஏற்படுத்தும். மேலும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் இணைந்து மாலை நேர வகுப்புகளை நடத்திட தகுதியான தன்னாா்வலா்கள் பதிவு செய்ய போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இக்கலைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா் ஆகிய 8 கல்வி வட்டாரங்களில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தி, கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கல்வியிழந்த 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு, அவா்கள் இழந்த கல்வியை மீட்டெடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் இக் கலைக்குழுவினா் ஈடுபட உள்ளனா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ் மூா்த்தி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பாலசுப்பிரமணி (பாலக்கோடு), ரவி (அரூா்), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் வெங்கடேசன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.