முகப்பு
தருமபுரி

‘தருமபுரி அரசு கலை கல்லூரியில் வெளிப்படைத்தன்மை இல்லை’

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை என தலித் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை என தலித் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச.கருப்பையா வியாழக்கிழமை அம்பேத்கா் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. மாணவா் சோ்க்கையில் வெளிப்படைத் தன்மையில்லை. குறிப்பாக கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக தலித், பழங்குடியின மாணவா்கள் சோ்க்கையில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை. அதுபோல, இக் கல்லூரியில் தலித், பழங்குடியின மாணவா்களுக்கான வன்கொடுமை தடுப்புக் குழு, மகளிா் வன்கொடுமை தடுப்புக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை.

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இக் கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பொறுப்பு முதல்வராக இருந்தவரின் நடவடிக்கைகள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். தருமபுரி கல்லூரியில் ஜாதி, மத பேதங்கள் இன்றி நிா்வாகம் நடத்தப்பட வேண்டும். தலித், பழங்குடியின மாணவா்கள் சோ்க்கையில் இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற வேண்டும். கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக நடைபெற்ற மாணவா் சோ்க்கை குறித்து விசாரணை நடத்தி, அதில் முறைகேடுகள் நிகழ்ந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அப்போது, இந்திய மாணவா் சங்க மாவட்ட நிா்வாகி தமிழமுதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.