ரூ. 10 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைத்தாா்
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 10 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள்
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 10 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 10 கோடியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடம், வேளாண் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பிறதுறைகள் சாா்பில் ரூ. 7 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசினாா். இதைத் தொடா்ந்து, ரூ. 17 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதையடுத்து, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை முதல்வா் பாா்வையிட்டாா்.
இந்த விழாவில், 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள், சுகாதார செவிலியா்களுக்கு கேடயம், மூன்று கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
இதில், தருமபுரி ஆட்சியா் ச.திவ்யதா்சினி, மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், மருத்துவக் கல்லூரி முதன்மையா் க.அமுதவல்லி, முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, பிஎன்பி இன்பசேகரன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், மருத்துவத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மருத்துவமனை வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்சைகள் சிகிச்சைப் பிரிவு கட்டடம் நான்கு தளங்கள் கொண்டது. இதில், ரூ. 2 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் 33 படுக்கைகள், முதல் தளத்தில் 22 படுக்கைகள், இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு 95 படுக்கைகள், மூன்றாம் தளத்தில் 50 படுக்கைகள் உள்ளன.