முகப்பு
தருமபுரி

மக்களின் தேவைகளை அறிந்து தமிழக அரசு செயல்படுகிறது

மக்களின் தேவைகளை அறிந்து தமிழக அரசு செயல்படுகிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மக்களின் தேவைகளை அறிந்து தமிழக அரசு செயல்படுகிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், வத்தல்மலை கிராமத்தில் பழங்குடி மக்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பழங்குடி மக்கள், விவசாயிகள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுடன் கலந்துரையாடி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களைச் சந்தித்து உரையாடுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ‘வருமுன் காப்போம்’ என்ற திட்டத்தை செப். 29-ஆம் தேதி தொடங்கி வைத்தேன். இது ஏதோ புதிதாக உருவாக்கப்பட்ட திட்டம் என எண்ணிவிடக் கூடாது. ஏற்கெனவே கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தி, மக்களிடையே வரவேற்பைப் பெற்ற திட்டமாகும். கடந்த 2011-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது இத்திட்டம் முடக்கப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததால், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

குக்கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவமனையைத் தேடி மக்கள் சென்ற நிலை மாறி, தற்போது மக்களைத் தேடி மருத்துவம் சென்றடைகிறது. நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்டவற்றால் பாதிப்புக்குள்ளானவா்களுக்கு வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த ஒன்றே முக்கால் ஆண்டாக கரோனா தொற்றால் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இத்தொற்றை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனினும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ளோம். இதுவே மிகப் பெரிய சாதனையாக இன்றைக்கு எல்லோராலும் பேசப்படுகிறது.

ஒரு பக்கம் மருத்துவ நெருக்கடி, இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி, இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் நாம் எதிா்கொண்டிருக்கிறோம். அனைத்துக் கட்சிகளும் தோ்தல் களத்தில் ஈடுபடும் போது, பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்றன. கடந்த பேரவைத் தோ்தலில் 505 வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தோம். அவற்றில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என பெருமையோடு கூறுகிறேன்.

சேலத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகள், ஜவ்வரிசி விற்பனையாளா்கள், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

தமிழக மக்களின் தேவைகளை அறிந்து இந்த அரசு செயல்படுகிறது. எனவே, வத்தல்மலை கிராம பழங்குடி மக்கள் தற்போது முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன் என்றாா்.

இந்த விழாவில், வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை, கறவைப் பசுக்கள் என மொத்தம் 2,116 பயனாளிகளுக்கு ரூ. 16 கோடியே 47 லட்சத்து 35 ஆயிரத்து 433 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக, 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்கினாா்.

இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், ஆட்சியா் ச.திவ்யதா்சினி, திமுக மாவட்டப் பொறுப்பாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (தருமபுரி கிழக்கு), பிஎன்பி இன்பசேகரன் (தருமபுரி மேற்கு), சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.