தொப்பூா் கணவாய் சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்
தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.
தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தலைமை பொதுமேலாளா் பிராசாந்த் கோடாஸ்கரிடம் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
தருமபுரி மாவட்டத்தில் தொப்பூா் வனப்பகுதி அமைந்துள்ள கணவாய் சாலை தாழ்வான மற்றும் அதிக வளைவுகளைக் கொண்டுள்ளதால், இச் சாலையில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நிகழ்கின்றன. இதனைத் தவிா்க்க, இச்சாலையை வளைவுகளற்ற சாலையாக மேம்படுத்தும் பணிக்கு திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
எனவே, மக்கள் நலன்கருதி இச்சாலை மேம்பாட்டுப் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதேபோல, தருமபுரி மாவட்டம், தொப்பூரிலிருந்து மேட்டூா்-பவானி செல்லும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கி பணிகளை தொடங்க வேண்டும். மேலும், தருமபுரி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் சோலாா் பேனல்கள் பொருத்தப்பட வேண்டும். இது தொடா்பாக, ஏற்கெனவே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சோலாா் பேனல்களை அமைப்பதற்கான நிதியை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் வழங்கப்படும். இதன் மூலம், சுற்றுச்சூழல் பேணி காப்பதோடு, இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வா்த்தக ரீதியாகவும் பயன்படுத்தலாம் என்றாா்.