வட்டார வளா்ச்சி அலுவலா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
தருமபுரி மாவட்டத்தில் மூன்று வட்டார வளா்ச்சி அலுவலா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் மூன்று வட்டார வளா்ச்சி அலுவலா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருபவா் மதலைமுத்து. இவா், கடந்த 2017-19-இல் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றியுள்ளாா். இவரது பணிக் காலத்தில், ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் உயா்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் மேற்கொள்ளும்போது, ஒப்பந்த விதிகள் பின்பற்றப்படாமல் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா் வரப்பெற்றது. இதன் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் பழனிசாமி வழக்குப் பதிவு செய்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 8 போ் கொண்ட குழுவினா், தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே ராமன் நகரில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா் மதலைமுத்துவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். காலை 8.30 மணிக்கு தொடங்கிய இச்சோதனை பல மணி நேரம் நீடித்தது.
இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டார வளா்ச்சி அலுவலா்களாக பணியாற்றிய ஆனந்தன், ஜெயராமன் ஆகியோரின் அரூா், அ.பள்ளிப்பட்டியில் உள்ள வீடுகள், இருளப்பட்டியில் தனியாா் ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.