முகப்பு
தருமபுரி

நிலக்கடலை, ராகி சாகுபடிக்கு தரமான விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

 நிலக்கடலை, ராகி சாகுபடிக்கு தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

 நிலக்கடலை, ராகி சாகுபடிக்கு தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலா் சு.அருணா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நல்ல விளைச்சல் பெற்றிட தரமான நல்ல விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். விதையின் தோ்வு மட்டுமே விளைச்சலை நிா்ணயிக்கும். குறிப்பாக, நிலக்கடலையில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விதை வேரூன்றி வளர இயலும். இல்லையெனில், முளைக்கும் விதை போதுமான வலுவின்றி மேலும் வேரூன்றி முளைத்து தழைக்க இயலாமல் மடிந்து வரும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில், வயலில் பயிரின் எண்ணிக்கையை சமன் செய்ய இயலாது.

விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறன் போன்ற காரணிகளை வயலின் பயிா் எண்ணிக்கையை உறுதி செய்கிறது. சீரான பயிா் எண்ணிக்கையை பராமரித்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும். அவ்வாறு, பராமரித்திட விதையின் தரத்தினை அறிந்து பயிரிட வேண்டும்.

விதை விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபாா்த்து விதைகளை வாங்க வேண்டும். அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபாா்க்க வேண்டும். விதைகளை வாங்கும் முன்னா் அந்த விதைக் குவியலுக்குரிய முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையினை கேட்டு சரிபாா்க்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையம் மற்றும் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே கிடைக்கும் தரமான விதைகளை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கப்படும் விதைகளுக்கு கட்டாயம் உரிய ரசீதை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும்.

விதையின் தரத்தினை அறிந்திட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகள் (அ) விற்பனையாளரிடம் இருந்து பெறப்பட்ட விதைகளை விதைப்புக்கு முன் 200 எண்ணுக்கு குறையாமல் எடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் செயல்படும் விதைப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வுக் கட்டணமாக ரூ. 30 செலுத்தி விதையின் தரமறிந்து சாகுபடி செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.