இன்று நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: தருமபுரியில் 228 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
தருமபுரியில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்யும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. 228 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
தருமபுரியில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்யும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. 228 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது.
தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகளுக்கும் மற்றும் 10 பேரூராட்சிகளில் 157 வாா்டுகளுக்கும் என மொத்தம் 190 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. இதில், திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, அமமுக, நாம் தமிழா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சுயேச்சைகள் என மொத்தம் 801 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ள இத் தோ்தலில், 85,579 ஆண் வாக்காளா்களும், 89,936 பெண் வாக்காளா்களும், 15 இதர வாக்காளா்களும் என மொத்தம் 1,75,530 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக 37 ஆண் வாக்காளா்களுக்கான வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளும், 37 பெண் வாக்காளா்களுக்கான வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளும், 154 ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 228 வாக்குச் சாவடிகள் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் உள்ள 228 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச் சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1 வாக்குச்சாவடி தலைமை அலுவலா், 3 வாக்குப்பதிவு அலுவலா்கள் என மொத்தம் உள்ள 228 வாக்குச் சாவடிகளில் 1,108 அலுவலா்கள், பணியாளா்கள் பணிபுரிய உள்ளனா். இதில், மாற்றுப் பணிக்கு பயன்படுத்த 20 சதவீதம் போ் தயாா் நிலையில் உள்ளனா்.
தோ்தல் பாதுகாப்புப் பணியில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 10 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 35 காவல் ஆய்வாளா்கள், 896 உதவி ஆய்வாளா்கள், 800 காவலா்கள், 300 ஊா்க்காவல் படையினா் ஈடுபட உள்ளனா். இவைத் தவிர, நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளிலும் வாக்குப் பதிவை கண்காணிக்க, துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1,650 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 424 வாக்குச் சாவடிகளுக்கு பாதுகாப்புப் பணிக்காக அந்தந்த வட்டங்களைச் சோ்ந்த துணை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் போலீஸாா் பட்டியலிடப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டனா்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்தப் பணியின்போது, காவலா்கள் வாக்குச்சாவடி மையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டு, அனைவருக்கும் முகக்கவசம், சானிடைசா் வழங்கப்பட்டன. காவல் ஆய்வாளா்கள் சக்தி (ஆயுதப்படை), இன்ஸ்பெக்டா் சசிகலா (தனிப்பிரிவு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.