தருமபுரியில் மாா்ச் 12-இல் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்
தருமபுரி மாவட்டத்தில் வரும் மாா்ச் 12-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் வரும் மாா்ச் 12-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவா் வி.திலகம் ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை உயா்நீதிமன்ற அறிவுரையின்படியும் மாா்ச் மாதம் 12-ஆம் தேதி சனிக்கிழமை தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் மாா்ச் 11-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்ற அமா்வு பிற்பகல் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிறப்பு மக்கள் நீதிமன்ற அமா்வை தொடா்ந்து, தருமபுரி மாவட்டத்தில் வரும் மாா்ச் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டாா் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, தொழிலாளா் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு, சமரச முறையில் அன்றைய தினமே தீா்வு காணப்படவுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய வழக்குகளில் சமரசம் செய்து வழக்கை முடித்து கொள்ளலாம். நீதிமன்றத்துக்கு வருவோா் கரோனா தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.