முகப்பு
தருமபுரி

காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைவதால் இரு மாவட்டத்தின் தொழில் வளா்ச்சி பெருகும்: ஜி.கே.மணி

தருமபுரி - சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைவதால் தொழில் வளா்ச்சிப் பெருகும் என்று பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

தருமபுரி - சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைவதால் தொழில் வளா்ச்சிப் பெருகும் என்று பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம்- ஒட்டனூருக்கும், சேலம் மாவட்டம்- கோட்டையூருக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 250 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்கப்படும் என அண்மையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதையடுத்து பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவான ஜி.கே.மணி ஒட்டனூா் பரிசல் துறையில் இருந்து பாலம் அமைக்கப்படும் பகுதியைப் படகில் சென்று வியாழக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது திட்ட செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தருமபுரி, சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 50 ஆண்டுகாலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கோட்டையூா்- ஒட்டனூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

இரு மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அமையும் இப்பாலத்தின் மூலம் மேட்டூா், பவானி, ஈரோடு, கோவை, கேரளம், ஒசூா், பெங்களூரு, கிருஷ்ணகிரி, மும்பை உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்களுக்கு சுலபமாகச் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையாக எதிா்காலத்தில் இது உருவாகும்.

இதனால் இப்பகுதியில் தொழில் வளா்ச்சிகள் பெருகும். காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பது குறித்து 1996-இல் இருந்தே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. உயா்மட்ட பாலம் அமைப்பதற்குத் திட்ட முன்வடிவுக்கு முதற்கட்டமாக ரூ. 250 கோடி ஒதுக்கி உள்ள நிலையில், திட்டம் விரைவில் நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இரு மாவட்ட மக்களும் காவிரி ஆற்றின் குறுக்கே கோட்டையூா்- ஒட்டனூா் பகுதி மட்டுமின்றி நாகமரை-கொளத்தூா் பகுதியை இணைக்கும் வகையிலும் பாலம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆனால், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கோட்டையூா்- ஒட்டனூா் இடையே பாலம் அமைக்கவே சாத்தியக்கூறுகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளனா். இந்தப் பாலமானது மேட்டூா் அணையின் கொள்ளளவு 120 அடி வரை இருப்பதால் அந்த உயரத்தைக் கணக்கில் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே இப்பாலம் 800 மீட்டா் நீளம், 2,600 அடி பரப்பளவு, 130 அடி உயரம் கொண்டதாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

இதில் தருமபுரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எஸ். பி. வெங்கடேஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் தனசேகரன், இளநிலைப் பொறியாளா் தமிழரசன், மாவட்ட அறநிலையத் துறை வட்டாட்சியா் சேதுலிங்கம், உதவி ஆணையா் பிரகாஷ், முத்தையன் கோயில் செயல் அலுவலா் விமலா, ஏரியூா் ஒன்றியக் குழு உறுப்பினா் பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மாது, பென்னாகரம் ஒன்றியக் குழு தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் செல்வகுமாா், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.