முகப்பு
தருமபுரி

மதிப்புக் கூட்டு இயந்திர சேவை மையம் அமைக்க மானியம்: விவசாயக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

வேளாண் விளை பொருள்கள் மதிப்புக் கூட்டு இயந்திர சேவை மையம் அமைக்க வழங்கப்படும் 50 சதவீத மானியம் பெற தகுதியான விவசாயக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

வேளாண் விளை பொருள்கள் மதிப்புக் கூட்டு இயந்திர சேவை மையம் அமைக்க வழங்கப்படும் 50 சதவீத மானியம் பெற தகுதியான விவசாயக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பதிவு செய்யப்பட்ட விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் வேளாண் பொறியியல் துறையில் முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மூலம் வேளாண் விளை பொருள்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் விளை பொருள்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்களான எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு, தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம், வாழை நாா் பிரித்தெடுக்கும் கருவி, சிறிய வகை நெல் அரவை இயந்திரம், நெல் உமி நீக்கும் இயந்திரம், தானியம் அரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உடைத்து தரம் பிரிக்கும் இயந்திரம் மற்றும் மாவரைக்கும் இயந்திரம் உள்பட ஒன்றுக்கும் மேற்பட்ட இயந்திரங்களை அவற்றின் மொத்த விலை ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பெற்று மதிப்பு கூட்டும் இயந்திர சேவை மையம் அமைத்துக் கொள்ளலாம்.

ஒரு சேவை மையம் அமைப்பதற்கு 50 சதவீதம் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் தருமபுரி மாவட்டத்துக்கு 6 மையத்துக்கு ரூ. 30 லட்சம் மானியம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

வேளாண் விளை பொருள்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம் அமைக்க ஆா்வமுள்ளவா்களுக்கு மூலப் பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பு கூட்டிய வேளாண் விளை பொருள்களை சேமித்து வைக்க பாதுகாப்பான இடவசதி கொண்ட கட்டடம், இயந்திரங்களை இயக்கத் தேவையான திறன் கொண்ட மும்முனை மின்சார இணைப்பு வசதி இருக்க வேண்டும்.

முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத் திட்ட விவசாயக் குழுக்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்ட கிராம குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஆா்வமுள்ள விவசாயக் குழுக்கள் தங்கள் விண்ணப்பத்தை உதவிசெயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியா் வளாகம், தருமபுரி, 04342- 296132, 94432 67032 மற்றும் உதவி செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், அரூா், தருமபுரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 04346-296077, 94420 07040 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.