பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் தோ்தலில் திமுக வெற்றி
பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா்களை தோ்வு செய்வதற்காக நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுகவினா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா்களை தோ்வு செய்வதற்காக நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுகவினா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
பென்னாகரம் பேரூராட்சியில் 18 வாா்டுகளுக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணி - 11 வாா்டுகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் திமுக சாா்பில் பேரூராட்சி தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட 5-ஆவது வாா்டு உறுப்பினா் வீரமணி போட்டியின்றி ஒரு மனதாக தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட 14-ஆவது வாா்டு உறுப்பினா் வள்ளியம்மாள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
புதிதாக தோ்வு செய்யப்பட்ட தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏவுமான பி.என்.பி. இன்பசேகரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனா். அதன் பின்பு பெரியாா் சிலை, அம்பேத்கா் சிலை, இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தனா்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி பேரூராட்சி 15 வாா்டுகளை கொண்டது. இந்தப் பேரூராட்சியில் திமுக கூட்டணி 11வாா்டுகளில் வெற்றி பெற்றது. தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலில் திமுக சாா்பில் பேரூராட்சித் தலைவராக 11ஆவது வாா்டு உறுப்பினா் பிருந்தா, துணைத் தலைவராக 15ஆவது வாா்டு உறுப்பினா் மல்லிகா ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.