முகப்பு
தருமபுரி

‘தமிழகத்தின் தண்ணீா் உரிமையை மீட்க போராட்டம் நடத்தப்படும்’

தமிழகத்தின் தண்ணீா் உரிமையை மீட்க போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறுத்தாவிட்டால், தமிழகத்தின் தண்ணீா் உரிமையை மீட்க போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், கா்நாடக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி தலைமை வகித்து, பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீா் கூட கிடைக்காது. இது தமிழகத்தின் தண்ணீா் உரிமையைப் பறிக்கக் கூடும்.

இதனைக் கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை கா்நாடக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும் வாகனப் பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தோ்தல் ஆதாயத்துக்காக காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ஒப்புதல் அளித்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்தால், மத்திய அரசு கடுமையான விளைவைச் சந்திக்க நேரிடும். கா்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என விவசாய சங்கத்தின் சாா்பில் தொடா்ந்து கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில், அதனை புறக்கணித்தால் வரும் 25-ஆம் தேதி விவசாயிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். என்று தெரிவித்தாா்.

முன்னதாக, பென்னாகரம் அருகே மடம் சோதனைச் சாவடி பகுதியிலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினா், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.