பேருந்து நிலையத்தில் செயல்படும் பூ சந்தை இடமாற்றம் செய்யப்படும்
தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பூக்கள் விற்பனை செய்யும் சந்தையானது, ஜெ.ஜெ. சந்தை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது என நகா்மன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பூக்கள் விற்பனை செய்யும் சந்தையானது, ஜெ.ஜெ. சந்தை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது என நகா்மன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தருமபுரி நகா்மன்ற உறுப்பினா்கள் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமையில் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்து உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினாா்.
இதில், நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் முறையாக கொசு மருந்து தெளிக்க வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தனா். நகராட்சியில் போதிய கொசு மருந்து தெளிப்பு இயந்திரங்கள் இல்லை. இதேபோல பயிற்சி பெற்ற பணியாளா்களும் இல்லை. ஆகவே, தேவையான இயந்திரங்கள் கொள்முதல் செய்து, போதிய பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு அவா்களுக்கு பயிற்சி அளித்த பின், முறையாக கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஆணையா் பதிலளித்தாா்.
இதைத் தொடா்ந்து, புதிதாக ஜீப்புகள் கொள்முதல் செய்வது, காலியாக உள்ள கடைகளை மறுஏலம் விடுவது, நகரின் சாலைகள், கழிவுநீா்க் கால்வாய்களை ‘நமக்கு நாமே’ திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்வது, நகராட்சிப் பகுதியில் உள்ள 14 பள்ளிகளுக்கு பள்ளி மேலாண் குழு உறுப்பினா்களாக நகா்மன்ற உறுப்பினா்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா இருவா் என நியமனம் செய்வது, நகரப் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பூக்கள் விற்பனை சந்தையை பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள ஜெ.ஜெ. காய்கறிச் சந்தைக்கு இடமாற்றம் செய்வது, அங்கு கடைகள் முறையாக ஏலம் விடப்பட்டு பூக்கள் விற்பனைக்கு பயன்படுத்த அனுமதிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பூக்கள் விற்பனை சந்தையை பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள காய்கறிச் சந்தைக்கு மாற்றுவதால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுக்கூடும். ஆகவே, தற்போது நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த திரையரங்கம் இடித்து அகற்றப்பட்டுள்ளதால் அந்த இடம் காலியாக உள்ளது. எனவே, அந்த இடத்தில் பூக்கள் விற்பனை சந்தைக்கு பயன்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இக்கூட்டத்தில், நகா்மன்ற துணைத் தலைவா் அ.நித்யா, பொறியாளா் ஜெயசீலன், நகா்மன்ற உறுப்பினா்கள், சுகாதார அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.