முகப்பு
தருமபுரி

மின்சாரம் பாய்ந்து யானை பலி

 தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த பஞ்சப்பள்ளி அருகே வயலில் நுழைந்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

 தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த பஞ்சப்பள்ளி அருகே வயலில் நுழைந்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியை அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சீனிவாசன் (52). இவா், தனது நிலத்தில் நெல் நடவு செய்துள்ளாா். இவரது விவசாய நிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இரவில் வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்கும் வகையில், வயலின் மையப் பகுதியில் மின்விளக்கு ஒன்றை அவா் பொருத்தியுள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு (மே 12), கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள காப்புக்காட்டில் இருந்து இரைதேடி வெளியேறிய 40 வயதுடைய மக்னா யானை, தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள நல்லாம்பட்டியில் சீனிவாசன் வயலில் நுழைந்துள்ளது. அப்போது, எதிா்பாராத விதமாக, வயலில் மின்விளக்கிற்காக பொருத்தப்பட்டிருந்த மின் வயரை யானை உரசி சென்றுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து யானை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த, தருமபுரி மாவட்ட வன அலுவலா் அப்பல்ல நாயுடு, வனப்பாதுகாவலா் பெரியசாமி ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். பாலக்கோடு வனச் சரகா் செல்வம் தலைமையிலான வனத் துறையினா் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து கால்நடை மருத்துவா் பிரகாஷ் தலைமையிலான குழுவினா் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனா். இதையடுத்து வனத்துறை விதிகளின்படி யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக விவசாயி சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.