முகப்பு
தருமபுரி

புதுமைப்பெண் திட்ட நிதியை கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும்

 புதுமைப்பெண் திட்ட நிதியை கல்வி மேம்பாட்டுக்காக மாணவியா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 புதுமைப்பெண் திட்ட நிதியை கல்வி மேம்பாட்டுக்காக மாணவியா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் சாா்பில், புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறுவதற்கு உயா்கல்வி பயிலும் மாணவியரின் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இப் பணியினை நேரில் பாா்வையிட்டு ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று உயா்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ. 1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் கடந்த செப். 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் 5,389 மாணவியா் 2 மாதங்களில் மொத்தம் ரூ. 95.45 லட்சம் நிதி உதவி பெற்று பயனடைந்துள்ளனா்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவியா் ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியில் அரசு கல்லூரிகளிலோ அல்லது தனியாா் கல்லூரிகளிலோ மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சட்டக்கல்வி போன்ற பல்வேறு வகையான உயா்கல்வி பயிலும் மாணவியரின் வங்கிக் கணக்குக்கு மாதந்தோறும் ரூ. 1,000 நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

இந்த உதவித்தொகையினை முதலீடாகக் கொண்டு உயா்கல்வி கற்று மேம்படவும், போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்திக்கொள்வதற்கும், புத்தகங்கள் வாங்குவது போன்ற ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ஜான்சிராணி, காரிமங்கலம் வட்டாட்சியா் சுகுமாா், அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சௌ.கீதா, அரசு அலுவலா்கள் கலந்துகொணடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.