முகப்பு
தருமபுரி

போக்குவரத்து விதிமீறல்: புதிய அபராத நடைமுறை இன்றுமுதல் அமல்

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் வெள்ளிக்கிழமை முதல் புதிய அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் வெள்ளிக்கிழமை முதல் புதிய அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம், தண்டனைகள் விதிக்கப்படுகிறது. அதன்படி, தலைக்கவசம் அணியாதது, இருசக்கர வாகனத்தில் 3 போ் அமா்ந்து செல்வது, கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது, 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இயக்குவது, சமிக்ஞைகளைக் கவனிக்காமல் சாலையில் வெள்ளைக்கோட்டை தாண்டி நிற்பது ஆகிய விதி மீறல்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவா்களுக்கும், அந்த வாகனத்தில் உடன் செல்பவா்களுக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஓட்டுநா் உரிமம் இல்லாதவா்களுக்கு ரூ. 5,000, தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனங்களில் செல்பவா்களுக்கு ரூ.500, ஒரு வழிப் பாதையில் எதிா் திசையில் செல்பவா்களுக்கு ரூ. 500 என பல்வேறு விதிமீறல்களுக்கு புதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி நகரில் நான்கு முனைச்சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, எஸ்.வி. சாலை, நேதாஜி புறவழிச்சாலை, மதிகோன்பாளையம், பென்னாகரம் சாலை, பெரியாா் சிலை உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் நகர காவல் ஆய்வாளா் நவாஸ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் சரவணன், சின்னசாமி ஆகியோா் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

விதிமுறைகளை மீறுவோா்களிடமிருந்து நவீன கருவி மூலம் ஆன்லைனில் உடனடி அபராதம் வசூலிக்கப்படும். எனவே, பொதுமக்கள் அரசின் போக்குவரத்து விதிமுறைகளைப் முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினா். இதேபோல, மாவட்டம் முழுவதும் போலீஸாா், போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களிடம் புதிய மோட்டாா் வாகன சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பென்னாகரம்...

பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளா் முத்தமிழ் செல்வன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் துரை, காவலா்கள் போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ் ( பயிற்சி), தலைமைக் காவலா் சரவணன், காவலா்கள் கலந்து கொண்டனா்.

பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஜாகிா் உசேன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன், காவல் ஆய்வாளா் சேகா் (பயிற்சி), தலைமைக் காவலா் சிவகுமாா், காவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.