ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 43 ஆயிரம் கன அடியாகச் சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 43 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளதால், அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 43 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளதால், அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
கா்நாடகத்தின் காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கா்நாடகத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவைப் பொறுத்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவுகள் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளன.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீரின் அளவு 37 ஆயிரம் கன அடியிலிருந்து, மீண்டும் 23 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து சனிக்கிழமை மாலை நிலவரப்படி 70 ஆயிரம் கன அடியாகவும், ஞாயிற்றுக்கிழமை காலை 65 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி 43 ஆயிரம் கன அடியாக மேலும் குறைந்தது.
நீா்வரத்து குறைந்துள்ள போதிலும் ஒகேனக்கல்லில் உள்ள சினி அருவி, பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் இறங்குவதற்கும் விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 55 ஆவது நாளாக நீடிக்கிறது. மேலும் பரிசல்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கலுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.