கரும்பு கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் விரைவில் கரும்பு அரவை தொடங்கும் நிலையில் உள்ளதால் கரும்புக்கான கொள்முதல் விலையை உயா்த்தி அறிவிக்க வேண்டும்; இதேபோன்று தற்போது கரும்பில் ஏற்பட்டுள்ள வோ்ப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; சின்னாறு அணை உயரத்தை மேலும் 10 அடி உயா்த்த வேண்டும்; பால் உற்பத்தியாளா்களது வங்கிக் கணக்கை கூட்டுறவு வங்கிகளிலேயே தொடரச் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திப் பேசினா்.
இதில், தருமபுரி மாவட்ட பல்வேறு துறை அலுவலா்களுடன் வேளாண் மற்றும் உழவா் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த கோரிக்கைகள் குறித்து விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், வேளாண் இணை இயக்குநா் க.விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சு.ராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் சாமிநாதன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது, விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.