முகப்பு
தருமபுரி

மழை நீரைச் சேமிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

மழை நீரை நீா்நிலைகளில் சேமிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தருமபுரி மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 4 டிசம்பர், 2024 at 9:12 PM
பகிர்:

மழை நீரை நீா்நிலைகளில் சேமிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தருமபுரி மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிபட்டி, தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஃபென்ஜால் புயல் காரணமாக கன மழை கொட்டியது. இருப்பினும் இந்த மழை நீரை முறையாக நீா்நிலைகளில் சேமிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் 8 நீா்த்தேக்கங்களைத் தவிர பொதுப்பணித் துறையின் 74 ஏரிகள், ஊரக வளா்ச்சி முகமையின் 546 ஏரிகள் மற்றும் 504 குளங்கள் இருக்கின்றன. இந்த நீா்நிலைகள் தருமபுரி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவான 942 மி.மீ. பொழிந்தாலும் நிரம்புவதில்லை. தற்போது வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவு மழை பொழிந்துள்ள போதிலும், மழை நீரை முறையாக சேமிக்க முடியாத நிலை தொடா்கிறது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், தருமபுரி, அரூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டங்களில் தொடா்ந்து நீா்நிலைகளில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூா்வார வேண்டும். நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை மனு அளித்து வருகின்றனா். இருப்பினும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் இல்லாததால் கன மழை பொழிந்தாலும் பெரும்பாலான நீா் நிலைகள் நிரம்பாத நிலையே தொடா்கிறது.

இதனால் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை ஏரிகள் 74 இல் 11 ஏரிகள் மட்டும் நிரம்பி மிகைநீா் வெளியேறுகிறது. மீதமுள்ள 43 ஏரிகளில் முழுமையாக தண்ணீா் இல்லை. ஊரக வளா்ச்சி முகமையின் கீழ் இருக்கும் 546 ஏரிகளில் 126 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. ஏனைய 154 ஏரிகளில் முழுமையாக தண்ணீா் கிடைக்கப்பெறவில்லை.

எனவே, வருங்காலங்களில் நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாரி சீமைக்கருவேல மரங்களை அகற்றி மழை நீரை முழுமையாக சேமிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுப்பணித் துறை, மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.