100 சதவீத வாக்குப் பதிவை எட்ட நடவடிக்கை: கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை எட்டத் தேவையான
நெய்வேலி: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை எட்டத் தேவையான விழிப்புணா்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து கடலூா்ஆட்சியா் அலுவலகத்தில் குழு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்ததாவது:
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தோ்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள், சந்தை, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கிராமியக் கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், பேரணி, மாரத்தான், மனித சங்கிலி போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
விழிப்புணா்வு வாசகங்கள் பிரசுரிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், வாகனங்களில் ஒட்டுவில்லைகளை ஒட்டுதல், ராட்சத பலூன் பறக்க விடுதல் போன்ற விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பட்டியல் (பில்), ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகித்திடும் பால் பாக்கெட்டுகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை அச்சிட்டு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
18 வயது நிரம்பிய முதல் தலைமுறை வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்தும், 100 சதவீத வாக்குப் பதிவு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன், துண்டுப் பிரசுரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தகுதியுள்ள அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வன் (பொது), தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.