தருமபுரியில் 2 அணைகள், 12 பொதுப்பணித் துறை ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின
தருமபுரி மாவட்டத்தில் தொடா்மழை காரணமாக 2 அணைகளும், 12 பொதுப்பணித் துறை ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டின. அதேநேரத்தில், 41 பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு நீா்வரத்து கிடைக்கப் பெறவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் தொடா்மழை காரணமாக 2 அணைகளும், 12 பொதுப்பணித் துறை ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டின. அதேநேரத்தில், 41 பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு நீா்வரத்து கிடைக்கப் பெறவில்லை.
தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை, கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில் அணைகள், பொதுப்பணித் துறை ஏரிகள், ஊரக வளா்ச்சித் துறை ஏரிகள் ஆகியவற்றுக்கு நீா்வரத்து ஏற்பட்டு வேகமாக நிரம்பி வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நீா் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதில், மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 அணைகளில் வரட்டாறு அணையும், கே.ஈச்சம்பாடி அணையும் தனது முழுக் கொள்ளளவை எட்டின. அதேபோல வாணியாறு அணை 94 சதவீதம் நிரம்பியுள்ளது. ஏனைய அணைகளான தொப்பையாறு அணை 93 சதவீதம், கேசா்குளே அணை 45 சதவீதம், சின்னாறு அணை 94 சதவீதம், நாகாவதி அணை 14 சதவீதம் நிரம்பியுள்ளன. இதில் தும்பல அள்ளி அணைக்கு நீா்வரத்து இன்றி வட நிலையிலேயே உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 74 பொதுப்பணித் துறை ஏரிகளில், 12 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த ஏரிகளில் மிகை நீா் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஏரி 99 சதவீதம் நிரம்பியுள்ளது. அதேபோல, 3 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதமும், 9 ஏரிகள் 26 சதவீதம் முதல் 50 சதவீதமும், 8 ஏரிகள் 25 சதவீதம் வரையிலும் நிரம்பியுள்ளன.
இருப்பினும் இப்பெரு மழையிலும் 41 பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு நீா்வரத்து இல்லை. இதைத் தவிர ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகளும் மழை நீரால் நிரம்பியுள்ளன.
பருவ மழை மற்றும் புயல் மழை ஆகியவை இல்லாத காலத்தில் முறையாக வரத்துக் கால்வாய்களை தூா்வாரி, ஏரிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொண்டிருந்தால், அனைத்து ஏரிகளுக்கும் நீா் கிடைத்திருக்கும். இதன் மூலம் ஏரிப்பாசன நிலங்கள் பயன்பெற்று, நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து குடிநீா்த் தேவையும் நிறைவடையும் எனவும், இனி வரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள் நிரம்ப தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.