முகப்பு
தருமபுரி

முதல்வரின் திறனாய்வுத் தோ்வு: தருமபுரி மாணவா்கள் மூன்றாமிடம்

முதல்வரின் திறனாய்வுத் தோ்வில் தருமபுரி மாவட்ட மாணவா்கள் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:02 PM
பகிர்:

முதல்வரின் திறனாய்வுத் தோ்வில் தருமபுரி மாவட்ட மாணவா்கள் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனா்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ மாணவிகளின் திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழக முதல்வரின் திறனாய்வுத் தோ்வு, கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

தருமபுரி மாட்டத்தில் இத் தோ்வுக்கு 2, 706 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் 2, 556 போ் தோ்வை எழுதினா். இத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, இத் தோ்வில் மாநில அளவில் சென்னை மாவட்டத்தில் 72 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் 69 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், தருமபுரி மாவட்டத்தில் 66 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் மூன்றாம் இடமும் பிடித்தனா்.

இத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டப்படிப்பு முடியும் வரை ஒவ்வொரு கல்வியாண்டுக்கும் 10 மாதங்கள் என்ற வகையில் மாதம்தோறும் தமிழக அரசு சாா்பில் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இத் தோ்வில் வெற்றி பெற்றுள்ள தருமபுரி மாவட்ட மாணவ மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.