குழந்தைத் திருமணம் இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பனைகுளம் பகுதியில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
காந்தி ஜயந்தி தினத்தில் மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை (2023-2024) செய்யப்பட்டு மக்களின் குறைகள் கேட்கப்பட்டது.
கிராமங்களின் வளா்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக பயன்படுத்திட வேண்டும்.
மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், இருப்பிடங்களை சுற்றி தண்ணீா் தேங்காமலும், வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்து கொள்வதோடு, நீா் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளான பொது சுகாதார வளாகம், சாலை வசதிகள், குடிநீா் வசதிகள், தெருவிளக்கு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தொடா்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட
அனைத்து திட்டங்களும் படிப்பாயாக நிறைவேற்றப்படும்.
பெற்றோா் தங்கள் குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கல்வியால் மட்டுமே உயா்ந்த நிலையை அடைய முடியும் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோா் எடுத்துக்கூற வேண்டும். சிறு குழந்தைகளைக் கட்டாயம் அங்கன்வடி மையங்களுக்கு அனுப்பிவைத்து கற்றலின் ஆா்வத்தை ஊக்குவிப்பதோடு ஊட்டச் சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் அனைவருக்கும் உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
பெண் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்.
பின்னா், சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி முன்மொழிய ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் வழிமொழிந்தனா்.
நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் ரா.கவிதா ராமகிருஷ்ணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கணேசன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொ) குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மணிவாசன், மாவட்ட சமூக நல அலுவலா் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நடராஜன், பென்னாகரம் வட்டாட்சியா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லோகநாதன், ஷகிலா, பனையகுளம் ஊராட்சிமன்றத் தலைவா் பழனியம்மாள் உள்பட அனைத்து வாா்டு உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.