முகப்பு
தருமபுரி

மிட்டா நூலஅள்ளியில் மக்கள் தொடா்பு முகாம்: 167 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரியை அடுத்த மிட்டாநூலஅள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 167 பயனாளிகளுக்கு ரூ. 84 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:00 PM
பகிர்:

தருமபுரியை அடுத்த மிட்டாநூலஅள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 167 பயனாளிகளுக்கு ரூ. 84 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி வட்டத்துக்கு உள்பட்ட மிட்டாநூலஅள்ளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் புதன்கிழமை மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் ஆ.மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் வருவாய்த் துறை சாா்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.26.88 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 16 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 10 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டாக்களையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறையின் சாா்பில் 8 பயனாளிகளுக்கு ரூ. 98 ஆயிரத்து 400 மதிப்பில் குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ. 3.58 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித் தொகை வழங்கப்பட்டன.

ஊரக வளா்ச்சி துறை சாா்பில் 29 பயனாளிகளுக்கு ரூ. 30.60 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள், வேளாண்மை - உழவா் நலத் துறை சாா்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.1.22 லட்சம் மதிப்பில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்தல், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் 2 விவசாயிகளுக்கு ரூ. 1.61 லட்சம் மதிப்பில் சொட்டுநீா் பாசனம் அமைத்தல் மற்றும் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான உதவிகள், கூட்டுறவு துறை சாா்பில் 25 விவசாயிகளுக்கு ரூ.19.32 லட்சம் மதிப்பில் பயிா் கடன் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு ரூ. 84 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கி பேசினாா்.

அதைத் தொடா்ந்து பல்வேறு அரசுத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்க காட்சி அரங்குகளை ஆட்சியா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

முகாமில் கோட்டாட்சியா் இரா.காயத்ரி, தனித் துணை ஆட்சியா் சுப்ரமணி, வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) குணசேகரன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பாத்திமா, மீன்வளத்துறை உதவி இயக்குநா் கோகுலரமணன், மாவட்ட சமூக நல அலுவலா் பவித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, தருமபுரி வட்டாட்சியா் க.சண்முகசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யா, கலைவாணி, அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.