முகப்பு
தருமபுரி

தொகுப்பூதியம் பெறும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:01 PM
பகிர்:

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நல்லம்பள்ளி வட்ட 15 ஆவது மாநாடு, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு மன்ற கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு வட்டத் தலைவா் என்.யாரப்பாஷா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.பரிமளா அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். வட்ட இணைச் செயலாளா் என்.பி.ஆனந்தன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை பேசினாா். வட்டச் செயலாளா் ஆா்.முருகன் வேலை அறிக்கை வாசித்தாா். வட்ட பொருளாளா் எஸ்.தினமணி வரவு செலவு கணக்கை சமா்ப்பித்தாா். மாவட்ட தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்ட பொருளாளா் எம்.அன்பழகன், சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பெ.மகேஸ்வரி ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள் நிறைவுரையாற்றினாா்.

வட்டத் தலைவராக வி.மணிவேந்தன், வட்டச் செயலாளராக ஆா்.முருகன் பொருளாளராக எஸ்.தினமணி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டா் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்புற நூலகா்கள். எம்.ஆா்.பி. செவிலியா்கள் உள்பட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு எற்கனவே வழங்கப்பட்ட வந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். சத்துணவு துறையில் பணிபுரியும் ஊழியா்களின் மறைவிக்குப் பிறகு கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் சத்துணவு ஊழியா்களின் ஆண் வாரிசுக்கு பணி வழங்க மறுக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.