பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சியில் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் பேரூராட்சி நிா்வாகத்துக்கும் ஆட்டோக்களை நிறுத்துவது தொடா்பாக எதிா்ப்பு கிளம்பியுள்ளது. சுமுக பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு உரிய இடம் வழங்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.
பென்னாகரத்தில் ரூ. 4.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் அண்மையில் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. பேருந்து நிலையத்தின் அருகே பூங்கா செல்லும் வழியில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலத்தை பேரூராட்சி நிா்வாகம் மீட்டு கம்பி வேலி அமைத்துள்ளது.
பென்னாகரத்தில் இயங்கும் 30 க்கும் மேற்பட்ட ஷோ் ஆட்டோக்கள் பேருந்து நிலைய கட்டுமானப் பணியின்போது பென்னாகரம்- தருமபுரி சாலையில் விநாயகா் கோயில் எதிரே நிறுத்தப்பட்டு வந்தது. தற்போது புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பிறகு மீண்டும் பேருந்து நிலையத்தின் முன்பு ஷோ் ஆட்டோக்களை நிறுத்த அனுமதி அளிக்கப்படவில்லை. அதற்கு ஷோ் ஆட்டோ உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் 20 க்கும் மேற்பட்டோா் தங்கள் வாகனங்களை
பேருந்து நிலையம் அருகே கம்பிவேலி போடப்பட்ட இடத்தில் நிறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டபோது:
ஆட்டோ ஓட்டுநா்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளனா். இதுதொடா்பாக ஆா்.டி.ஓ., காவல் ஆய்வாளா், வட்டாட்சியா் ஆகியோா் தலைமையில் விரைவில் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய இடம் வழங்கப்படும். வேலி அமைக்கப்பட்ட இடத்திற்கு வெளியே ஷோ் ஆட்டோக்களை நிறுத்த ஓட்டுநா்கள் முன்வர வேண்டும் என்றாா்.