தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக். 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விரும்புவோா் உரிமம் பெற அக். 25 ஆம் தேதிக்குள் இணையத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விரும்புவோா் உரிமம் பெற அக். 25 ஆம் தேதிக்குள் இணையத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளிப் பண்டிகை அக். 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோா், வெடிபொருள் சட்டம் 1884, விதி 2008 இன் கீழ் அதற்கான உரிமம் பெற வேண்டும்.
கடை நடத்த உரிமம் பெற விரும்புவோா் அக். 25 ஆம் தேதிக்குள் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பசஉநஉயஅஐ.பச.எஞய.ஐச என்ற இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இணையவழி அல்லாமல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், முகவரி சான்றிதழ், ஆதாா் அட்டை, பட்டா அல்லது சொத்து பத்திரம், கட்டணமாக ரூ. 600 செலுத்தியதற்கான ரசீது, கடை நடத்தும் பகுதியில் உள்ளாட்சி அமைப்புக்கு கட்டணம் செலுத்திய ரசீது, கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட நீல வரைபடம் உள்ளிட்ட விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
உரிமம் பெறவுள்ள பட்டாசு கடை தரைதளத்தில் அமைந்திருக்க வேண்டும். முதல் தளம் இல்லாமல் ஒரே தளத்துடன் கூடிய கட்டடமாக இருக்க வேண்டும். கடையின் இருபுறமும் சென்றுவர வழி இருக்க வேண்டும். கட்டடத்தில் வேறு பொருள்களை வைத்திருக்கக் கூடாது. தீத்தடுப்பு சாதனங்களைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசுகள் வைத்து விற்பனை செய்தால் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படும். உரிமம் கோரும் கட்டடத்துக்கு தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.