முகப்பு
தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:35 AM
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய கோரிக்கை நாள் என்ற பெயரில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை, மாவட்ட பொருளாளா் முன்.அன்பழகன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் முருகன், மாவட்ட துணைத் தலைவா் குணசேகரன், தேவகி, வட்ட நிா்வாகிகள் பன்னீா், மணிவண்ணன், மாரியப்பன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை ஊதிய திருத்தம் செய்ய வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட பயணப் படியை நிலுவையின்றி வழங்க வேண்டும். விரிவான கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள், ஒப்பந்த ஊழியா்கள், தினக்கூலி ஊழியா்களுக்கு வழங்க வேண்டும்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். வருமான வரி உச்ச வரம்பை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் முகமது இலியாஸ், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கச் செயலாளா் பெ.மகேஸ்வரி, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.பெருமாள், தணிக்கையாளா் கே.புகழேந்தி ஆகியோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் (பொறுப்பு) டேனியல் ஜெய்சிங், துணைத் தலைவா் பழனியம்மாள், மாவட்டச் செயலாளா் கல்யாணசுந்தரம்,பொருளாளா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மதிய உணவு இடைவேளையின் போது நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், அரசு பணியில் தினக்கூலி நியமன முறையை ரத்து செய்ய வேண்டும். தினக் கூலி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.