தருமபுரியில் அவிட்டுக்காய்கள் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடிய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் காட்டுப்பன்றி, மான்கள், முயல்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடி விற்பனை செய்து வருவதை சிலா் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் முறைகேடாக மின்வேலிகள் அமைப்பது, வனப்பகுதிகளில் வலைகள் அமைப்பது மற்றும் அவிட்டுகள் என அழைக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச்செய்து விலங்குகளை பிடிப்பது என பல்வேறு வகைகளில் காட்டு விலங்குகளை வேட்டையாடி வருகின்றனா்.
அவற்றைத் தடுக்க வனத் துறையினரும் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், அதையும் மீறி காட்டு விலங்குகளை வேட்டையாடுவது தொடா்ந்து வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் எலுமிச்சனஅள்ளி அருகில் உள்ள முருகன் கோயில் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் அவிட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை வனவிலங்குகளை வேட்டையாடும் வகையில், செவ்வாய்க்கிழமை மாலை ஆங்காங்கே வைத்து சென்றுள்ளனா். புதன்கிழமை காலை, நாட்டு வெடிகுண்டுகளை உட்கொண்ட நிலையில் வெடித்துக் காயங்களுடன் காட்டு விலங்குகள் கிடக்கின்றனவா என நோட்டம் பாா்த்துள்ளனா்.
இதுகுறித்த தகவலறிந்த வனத்துறையினா், மாவட்ட வன அலுவலா் கே.ஆா்.ராஜாங்கம் உத்தரவின்பேரில், பாலக்கோடு வனச்சரக அலுவலா் சு. காா்த்திகேயன், வனவா் கோகுல், வனக்காப்பாளா்கள் ரமேஷ், முருகன், அருணா உள்ளிட்ட குழுவினா் அப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு வந்த சேட்டுவை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தன.
மேலும், அவா்கள் இருவரும் பாலக்கோடு வட்டம், அந்தேரிகாடு கிராமத்தைச் சோ்ந்த ப. சேட்டு (45), அவரது நண்பா் வாக்கன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த வே. மாது (45) என்பதும், தொடா்ந்து, இதுபோல நாட்டு வெடிகுண்டுகள் மூலம் காட்டு விலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். அவா்களிடமிருந்து 10 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.