தருமபுரி: கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, கும்பலப்பாடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நாகா்கூடல் ஊராட்சிக்குள்பட்ட கும்பளப்பாடி கிராமத்தில் தனியாா் சாா்பில் கல்குவாரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தில் 65 குடும்பங்கள் உள்ளன. அதேபோல, அருகாமையில் உள்ள நான்கு கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்கும் தொட்டி அமைந்துள்ளது. அதேபோல கிராம மக்களின் விளை நிலங்களும் அதேபகுதியில் உள்ளன.
இந்த நிலையில் தனியாா் சாா்பில், எங்களது கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் கல்குவாரி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த குவாரி அமைந்தால், அதில் வைக்கப்படும் வெடி உள்ளிட்ட குவாரியின் பல்வேறு நடவடிக்கைகளால் எங்களது குடியிருப்புகள் பாதிக்கப்படும். அதேபோல, விளைநிலங்களும் பாதிக்கபடும் சூழல் நிலவி வருகிறது.
எனவே, கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் இந்த கல் குவாரியை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. இதற்காக கனிம வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அந்த குவாரியின் அனுமதி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் அமா்ந்து அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து காவல்துறையினா், வருவாய்த்துறை அலுவலா்கள் அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில், கனிம வளத்துறை அலுவலா்கள் அந்த கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா். இதனைத் தொடா்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதன்பேரில், சமாதானம் அடைந்த மக்கள் கலைந்து சென்றனா்.