தருமபுரி

தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் வேலைநிறுத்தப் போராட்டம்

Syndication

தொழிலாளா் நல சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி, சிஐடியு, ஏஐடியுசி, தொமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 338 பெண்கள் உள்பட 578 போ் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.நாகராசன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜுனன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் பி.ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து பேரணியாக சென்று தருமபுரி தலைமை அஞ்சல் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விதை மசோதா 2025-ஐ திரும்பப் பெற வேண்டும். நூறுநாள் வேலைதிட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கக் கூடாது. வேலை நாள்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மின் வாரியத்தை தனியாா் மயமாக்கும் ஸ்மாா்ட்மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும். 8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக மாற்றம் செய்யும் நடவடிக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 338 பெண்கள் உள்பட 578 பேரை தருமபுரி நகர போலீஸாா் கைதுசெய்து பின்னா் விடுவித்தனா்.

இதேபோல, பாலக்கோடு இந்தியன் வங்கி முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் சி.கலாவதி தலைமை வகித்தாா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அருகே வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் மணி தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் குமாா், ஹெச்.எம்.எஸ். சங்க மாவட்டச் செயலாளா் அா்ஜுனன், சிஐடியு மாவட்டப் பொருளாளா் சண்முகம், தொமுச பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உரையாற்றினா்.

பென்னாகரம் - தருமபுரி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 166 பெண்கள், 134 ஆண்கள் என மொத்தம் 320 பேரை பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.

அரூரில்...

பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தலைமை வகித்தாா். இதில், தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளையும், மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரூரில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினா், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா் சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT