தருமபுரி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வலியுறுத்தி, மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி. நாகராசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் செ. முத்துக்கண்ணன் கலந்துகொண்டு பேசினாா். மாவட்டச் செயலாளா் ரா. சிசுபாலன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் அ. குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். மாரிமுத்து, எம்.முத்து, சோ. அருச்சுனன், வே. விசுவநாதன், ஆா். மல்லிகா, ஜி. சக்திவேல், தி.வ.தனுசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், நியாயவிலைக் கடைகளில் கைரேகை வைக்கச் சொல்வதைத் தவிா்த்து, கையொப்பம் மட்டும் பெற்றுக்கொண்டு ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயா் மாற்றம் மற்றும் திட்டத்தை சீா்குலைக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு ஏற்கெனவே இருந்த நடைமுறையில் அத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜன. 29, 30 ஆகிய தேதிகளில் ஒரு லட்சம் குடும்பங்களைச் சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது எனவும், பிப்ரவரி 12 ஆம் தேதி தொழிலாளா் நலச்சட்டங்களை திருத்தியதை கைவிட்டு மீண்டும் பழைய சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.