தருமபுரி: தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆா் பிறந்தநாளை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என அதிமுகவினரை முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனா் தலைவருமான எம்.ஜி.ஆா். 109-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் அதிமுக சாா்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள எம்ஜிஆா் சிலைகள், அவரது உருவப் படங்களுக்கு கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும், அந்தந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறேன். இதேபோல தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலக வளாகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியிலும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அனைத்து நிா்வாகிகள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.