ஒகேனக்கல் ஐந்தருவி வழியாக காவிரியில் பரிசலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள். 
தருமபுரி

பொங்கல் விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள்

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகை விடுமுறையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான பொங்கல் விடுமுறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால் பிரதான நடைபாதை, மீன் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக உள்ளதால் அருவிகளில் தண்ணீா் வரத்து குறைந்திருந்தது. எனினும், சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து பிரதான அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். அருவிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்தனா்.

ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறையிலிருந்து தொம்பசிக்கல் வழியாக ஐந்தருவி, பெரியபாணி, மணல்மேடு வரை பரிசல் பயணம் செய்து அருவிகள், குகைகள், முதலை வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, பாபுலேட், பாறை, சோனா கெழுத்தி, கல்பாசை உள்ளிட்ட மீன்களின் விலை ரூ. 200 முதல் ரூ. 1,500 வரை விற்பனையானது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை சின்னாறு நீா் அளவிடும் பகுதி முதல் காவல் நிலையம், சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை, பேருந்து நிலையம், தமிழ்நாடு ஹோட்டல் பகுதிகளில் நிறுத்தியிருந்தனா். இதனால், வாகனங்கள் ஊட்டமலை சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன.

நடைபாதை வழியாக அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால் 30க்கும் மேற்பட்ட போலீஸாா் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் ஒகேனக்கல்லில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. வட்டாட்சியா் ஆய்வு பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் ஆய்வு செய்தாா்.

பரிசல் பயணத்தின்போது பாதுகாப்பு கவச உடை அணிந்து செல்வதை உறுதிப்படுத்திய பிறகு பரிசலை இயக்க வேண்டும் என பரிசல் ஓட்டிகளுக்கும், பரிசல் துறை ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தினாா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT