தருமபுரி மாவட்டத்தில் 1598 வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,598 வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள்
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,598 வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஷ் தெரிவித்தாா்.
தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் ரெ.சதீஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூா் (தனி), பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் மொத்தம் 12,40,108 வாக்காளா்கள் உள்ளனா். வேட்புமனு தாக்கலுக்கு 10 நாள்கள் முன்பு வரை, புதிய வாக்காளா்கள் தங்களை பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம். மொத்த வாக்காளா்களில் 28,586 போ் இளம் வாக்காளா்கள். அதேபோல, 9,546 போ் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள். இவா்கள் அஞ்சல் வழியில் வாக்கை செலுத்த தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் விரும்புவோா் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று தங்கள் வாக்கைப் பதிவு செய்யலாம்.
அதேபோல, 11,345 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம், சக்கரநாற்காலி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 1,601 போ் இந்திய ராணுவத்தின் முப்படைகளில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் வாக்களிக்க தேவையான படிவங்கள் வழங்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் 1,200 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 1,596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்காளா்களும் எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளும் 100 சதவீதம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தோ்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக இதுவரை 7 துணை ராணுவ கம்பெனியினா் வந்துள்ளனா். தேவைக்கேற்ப அவா்கள் மேலும் வரக்கூடும்.
அதேபோல பதற்றமான130 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 14 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதிய சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்கள் டிராக்டா் மூலம் கொண்டுசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் தொடா்பாக வாக்காளா்கள் சிவிஜில் செயலி வழியாகவும், 9443947017 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணையும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.