கிருஷ்ணகிரியில் 634 பேருக்கு தாலிக்கு தங்கம் அளிப்பு
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை 634 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சம் செலவில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை 634 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சம் செலவில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
சமூக நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பி.ராஜேஷ் தலைமை வகித்தார்.
விழாவில், 634 பெண்களுக்கு ரூ. 76 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு தங்கக் காசுகள், 90 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான தையல் இந்திரங்கள் என மொத்தம் 724 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 11 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி. முனுசாமி வழங்கிப் பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு 2495 பெண்களுக்கு ரூ. 12 கோடியே 32 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் இதுவரை 1976 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 98 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலாண்டில் மேலும் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.
திருமண உதவி கேட்டு விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த உதவிகளை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார் அமைச்சர்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம், சட்டப்பேரவை உறுபபினர்கள் கே.இ. கிருஷ்ணமூர்த்தி, நா. மனோரஞ்சிதம், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.அசோக்குமார், ஊராட்சி ஒன்றியத் தலைவர் சி.கோவிந்தராஜ், முன்னாள் எம்.பி. சி.பெருமாள், வருவாய்க் கோட்டாட்சியர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாவட்ட சமூக நல அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.