முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி

சூளகிரி அருகே சுற்றித் திரியும் ஒற்றை யானை ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு விவசாயியைத் தாக்கி கொன்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

சூளகிரி அருகே சுற்றித் திரியும் ஒற்றை யானை ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு விவசாயியைத் தாக்கி கொன்றது. 
 கூட்டத்திலிருந்து தனியாகப் பிரிந்து வனப் பகுதியில் சுற்றித் திரியும் ஆண் யானை,  கடந்த சில நாள்களாக சூளகிரி வனப் பகுதியில் வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகிறது. இந்த நிலையில்,   சனிக்கிழமை சின்னாறு பகுதியில் பந்தரகுட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜப்பாவை (60) தாக்கிக் கொன்றது. இறந்த ராஜப்பாவின் உடலை மீட்க சென்றவரையும் தாக்கியது. 
இந்த நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை காலை சூளகிரி அருகே உள்ள தேவர்குட்டப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி முனிராஜ் (60) என்பவர் சின்னாறு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது, எதிரே வந்த யானையைப் பார்த்ததும் முனிராஜ் தப்பி ஓடினார்.
ஆனால்,  யானை அவரை துரத்திச் சென்று தும்பிக்கையால் தூக்கி வீசி,  தந்தத்தால் குத்திக் கொன்றது.  அப்போது, அங்கிருந்த பாறை மீது யானையின் தந்தம் மோதி உடைந்துள்ளது.  இதையடுத்து,  யானையை விரட்டும் வரை உயிரிழந்த முனிராஜியின் உடலை எடுக்க விடாமல் காவல்,  வனத் துறையினரிடம் அப் பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,  சம்பவ இடத்துக்கு வந்த எம்.எல்.ஏ. முருகனிடம் யானையை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  பின்னர், பொதுமக்களைச் சமரசம் செய்த போலீஸார்,  உயிரிழந்த விவசாயியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 தருமபுரி மண்டல வன பாதுகாவலர் உலகநாதன்,  கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி,  மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன்,  எஸ்.பி., மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  இதைத் தொடர்ந்து,  மயக்க ஊசி போட்டு யானையைப் பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட  முடிவு செய்யப்பட்டது. இதற்காக கர்நாடக மாநிலம்,  பன்னார்கட்டாவிலிருந்து டாக்டர் அருண் ஷா மற்றும் ஒசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்த வனப் பகுதிக்குள் சென்றனர். 
ஆனால்,  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை யானை தென்படவில்லை.  தொடர்ந்து யானையைப் பிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →