பாழடைந்த ஆற்றுப் பாலத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
பாழடைந்த மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தை இடித்து அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாழடைந்த மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தை இடித்து அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டி அருகேயுள்ள மஞ்சமேடு தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் ஸ்ரீ மாதேஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமில்லாமல், திருப்பத்தூர், மத்தூர், கிருஷ்ணகிரி, அரூர், ஊத்தங்கரை, கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து இக்கோயிலுக்கு நாள்தோறும் 1000-க்கும் அதிகமான பொதுமக்கள் சுவாமி தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர்.
இந்த ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஆற்றுப்பாலம் பழுதடைந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த ஆற்றுப் பாலத்தின் மேலே இருந்து பள்ளத்தில் குதித்து விளையாடும்போது பாலத்தின் அருகேயுள்ள ஆழமான பகுதிகளில் பலர் சிக்கிவிடுவதால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. மேலும் இங்கு குளிக்க வருவோரும் அடிபட்டு காயங்கள் ஏற்படுகின்றன. இந்த இடத்தில் அதிகம் விபத்து ஏற்படும் நிலையில் இந்த ஆற்றுப்பாலத்தை இடித்து அகற்றவேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை இந்த ஆற்றுப் பாலத்தை அகற்றவில்லை.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில் இந்த ஆற்றுப்பாலம் உள்ளதால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பல உயிர்களை பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் பாழடைந்த இந்த ஆற்றுப்பாலத்தை இடித்து அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.