ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்துள்ளதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தானது
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்துள்ளதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தானது நொடிக்கு 3, 500 கனஅடியாக குறைந்துள்ளது.
தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி நாற்றாம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால் ,காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வரும் தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைந்துள்ளதால், கர்நாடகா அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீர் அளவுகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது. இந்த நிலையில் திங்கள் கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 4700 கனஅடியாக இருந்த தண்ணீரின் அளவானது, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்துகொண்டிருக்கிறது மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலையில் தற்போது நொடிக்கு 3500 கன அடியாக குறைந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த போது நீரில் மூழ்கி பாறைத் தட்டுகள், தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால் வெளியே தெரிகின்றன. மேலும் நீர்வரத்து குறைவினால் பிரதான அருவி,மெயின் அருவி, சினி அருவி,ஐந்தருவி மற்றும் சிற்றருவி களில் தண்ணீர் குறைந்த அளவிலேயே ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு களை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.