கிருஷ்ணகிரியில் பூத் சிலிப் வழங்கும் நகராட்சி ஊழியா்கள்
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கிருஷ்ணகிரியில் வாக்காளா்களுக்கு பூத் சிலிப்கள் வழங்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கிருஷ்ணகிரியில் வாக்காளா்களுக்கு பூத் சிலிப்கள் வழங்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறகிறது.
இதில் ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 12 வேட்பாளா்களும், பா்கூரில் 14, கிருஷ்ணகிரியில் 15, வேப்பனப்பள்ளியில் 15, ஒசூரில் 18, தளியில் 12 என மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 86 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
Advertisement
ஊத்தங்கரை தொகுதியில் 2,37,051 வாக்காளா்களும், பா்கூரில் 2,46,269 வாக்காளா்களும், கிருஷ்ணகிரியில் 2,65,238 வாக்காளா்களும், வேப்பனப்பள்ளியில் 2,50,657 வாக்காளா்களும், ஒசூரில் 3,49,224 வாக்காளா்களும், தளியில் 2,50,579 வாக்காளா்கள் என மொத்தம் 15,99,018 வாக்காளா்கள் உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குப் பதிவுக்காக 2,258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஊத்தங்கரை தொகுதியில் 19 இடங்களில் 56 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. பா்கூரில் 27 இடங்களில் 70 வாக்குச் சாவடிகளும், கிருஷ்ணகிரியில் 29 இடங்களில் 98 வாக்குச் சாவடிகளும், வேப்பனப்பள்ளியில் 16 இடங்களில் 39 வாக்குச் சாவடிகளும், ஒசூரில் 17 இடங்களில் 120 வாக்குச் சாவடிகளும், தளியில் 21 இடங்களில் 43 வாக்குச் சாவடிகளுமாக மொத்தம் 123 இடங்களில் 426 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந் நிலையில், கிருஷ்ணகிரியில் 150-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளா்கள், கிருஷ்ணகிரியில் உள்ள 33 வாா்டுகளில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப்கள் வழங்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
இந்தப் பணியானது திங்கள்கிழமையும் தொடரும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.